|
சிறிய நண்பர்கள் கூட்டம்,வேலையில்லா பட்டதாரி ,அப்பாவிற்கும் மகனுக்கும் சண்டை என படம் ஆரம்பித்த உடனே இது முழுக்க முழுக்க தனுஷ்-க்காக உருவாக்கப்பட்டப் படம் என நமக்கு புரிந்து விடுகிறது.
அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சண்டையில் "பி" மற்றும் "சி" செண்டர்களை மனதில் வைத்து வசனம் எழுதியுள்ளார்கள்.அப்பா ரகுவரன் வாழ்ந்து காட்டுகிறார்.அவரின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பதை நினைவூட்டுகிறார். "வீ மிஸ் யூ ரகுவரன்!"
சரி கதைக்கு வருவோம்! தனுஷ் வேலையில்லா பட்டதாரி. அப்பா ரகுவரனிடம் தினமும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். ஹீரோயின் நயன்தாரா என்ட்ரீ! ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனுஷ் படமாயிற்றே ! எப்பொழுதும் போல் பார்த்தவுடன் காதல்...அதிர்ஷ்டவசமாக அதே நிறுவனத்தில் தனுஷ்-ற்கு வேலையும் கிடைத்துவிடுகிறது. இதற்கும் மேலாக நயன்தாராவிடமே வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. கனவு , டூயட் என சிறிது நேரம் நம்மை வதைக்கிறார்கள்.
சரியான தருணத்தில் தனுஷ் தனது காதலை நயனிடம் சொல்ல,நயன் காதலை ஏற்க மறுக்கிறார்.மறுப்பதோடில்லாமல் தனுஷ்-ன் அப்பா ரகுவரனையும் அடித்து விடுகிறார்.மன உளைச்சலில் ரகுவரன் இறந்துவிடுகிறார்.
இரண்டாவது பகுதி பிராமண குடும்பத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ந்யன்தாரா ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர் ,கண்டிப்பான வளர்ப்பு ,பெரிய உறவுக்கூட்டம் என ஏதேதோ கதை விட்டிருக்கிறார்கள் . நயனுக்கும் அவருடைய உறவுப் பையன் கார்த்திக்-கும் திருமணம் ஏற்கணவே நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
நுழைகிறார் நமது ஹீரோ ! குடும்பத்தாரிடம் நல்ல பெயர் வாங்குகிறார். நயன் தனது திருமணதின் முதல்நாள் இரவு தனது காதலை தனுஷிடம் தெரிவிக்கிறார். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? விடை வெள்ளித் திரையில் !
படத்திற்கு படம் தனுஷின் நடிப்பு மெருகேறிக்கொண்டிருக்கிறது. நயன்தாரா முதல் பாதியில் வருகிறார்,காட்டுகிறார், சிறிது டூயட் பாடுகிறார். பின்னர் அடக்கமான பிராமணப் பெண்ணாக நடிக்கவும் செய்கிறார். இரண்டாவது பகுதியில் நன்றாக காதில் பூ சுற்றுகிறார்கள் எனத் தெரிந்தும் திரைக்கதையின் காரணமாக நம்மால் ரசிக்க முடிகிறது.
ரகுவரன் இறந்த பின்னர் வரும் காட்சிகளில் நம்மை அழ வைக்க முயன்று அதில் சிறிது வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இசையில் யுவன் சங்கர் புகுந்து விளையாடியிருக்கிறார். குறிப்பாக இரண்டு பாடல்கள் காதில் இனிமையாக ரீங்காரமிடுகின்றன.
தமிழ் சினிமாவின் தற்பொதய டிரெண்டை உடைக்காமல் ஒரு குத்துப்பாட்டும் உண்டு. ரயிலில் "சகீரா" ஆடுகிறார்.ரசிகர்கள் தியேட்டரில் ஆடுகிறார்கள். காமெடியில் பொல்லாதவனைத் தொடர்ந்து கருணாஸ்- தனுஷ் கூட்டணி கலக்கியிருக்கிறது. படத்தோடு தொடர்ந்து காமெடி இழையோடுவதை நம்மால் உணர முடிகிறது.
வெள்ளிக்கிழமையன்றே ரிலீசாக வேண்டிய படம் , திரையுலகத்தின் உண்ணாவிரதம் காரணமாக சனிக்கிழமையன்று ரிலீஸ் செய்துள்ளார்கள்.
யாரடி நீ மோகினி -- முழுக்க முழுக்க தனுஷ் படம்..சில காட்சிகளை தவிர்த்தால் குடும்பத்தோடு பார்க்காலாம்..
அதிகாலை ரேட்டிங் -- *** Last update : 12-04-2008 05:55
|